வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Saturday 6 May 2017

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமை


எல்லாரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப, அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

‘சஹஸ்ரநாமம்'  என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது.

ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார்.

அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம்.

அங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்... அது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

“நான் இதைக் கேட்கலையே...நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..?

 நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே...” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார்.

திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது!

அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார். “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன...?”

‘சுவாமி!  நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு;
இதை எடுத்துண்டு போ'ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்...?” என்றார் சிஷ்யர்.

அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைத்தார்:

அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்...

அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர்.

இப்படி லலிதையே போற்றும்படியான, லலிதமான சஹஸ்ரநாமம், எல்லாரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது.

 எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான்.

ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.

ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்...?

அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...?

ஞானியருள் அக்ரகண்யரான பீஷ்மரால்..

"பீஷ்மர்" என்றாலே "பயப்படத் தக்கவர்" என்று அர்த்தம்.

அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர்.

அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.

“அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ!  அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.

‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே - தர்மத்தைச் சொல்ல...?'  என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.

பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும்!

இந்த உண்மைக்கு சாட்சியமாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார்.

பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான்.

அவன் சொன்னது கீதை;  கேட்பது சஹஸ்ரநாமம்.

இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு.

பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார்.

"பகவத் குண தர்ப்பணம்" என்று அதற்குப் பெயர்.

'பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி' என்று பொருள்.

"விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்னும்
போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா?
அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்...

அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்!

சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா..?

அதைப் போலே சர்வ வியாபகனானவனை, அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.

நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது.

சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது... நம் சித்தத்திலும் நுழையாது.

"கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா?" என்று கேட்டால், அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான்.

இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது.

கீதையைச் சொன்னது பகவான்.

அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம்.

பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.

வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்...!!!

நாராயண! நாராயண!

0 Comments:

Post a Comment